நகர மயமாதலில் குழந்தைகள்

          
  ‎        

காட்டை அழித்து சுடுகாடு
****************************

       பிரபஞ்சம் மனிதனுக்கானது மட்டுமல்ல, இங்கு வாழ்ந்து வந்த கோடிக்கணக்கான உயிரினங்களோடு பரிமாண விபத்தாக மனிதர்களும் இணைந்து கொண்டனர். எல்லா உயிரினங்களையும் போல், இனப்பெருக்கத் தூண்டுதலால் தன் இனத்தை வளர்க்க குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். தன்னுடைய அலட்சியத்தாலும், அறியாமையாலும், சுயநலத்தாலும் மனித இனத்தால் கூண்டோடு அழிக்கப்பட்ட உயிரினங்கள் ஏராளம்.

உலகை அழிக்கும் வெடிகுண்டு
*********************************

நம் இனம் எண்ணிக்கையின்மையால் அழிந்துவிடுமோ என்னும் அபாயமற்று போகும் அளவிற்கு பல்கிப்பெருகிவிட்டது. உணவு, உடை, இருப்பிடம், காமம் போன்ற அடிப்படை தேவைகளே பலருக்கு முழுமையாய்க் கிடைக்காத நிலையில், சுவாசிப்பதற்கு காற்று தட்டுப்பாடு ஏற்படும் நிலையை நோக்கி நாம் பயணித்துக்கொண்டு இருக்கிறோம்.மனித இனத்தின் எண்ணிக்கையை அதிகரிப்பது மனிதனுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பூகோளத்திற்கே நெருக்கடியான நிலையை உருவாக்கும். மக்கள் தொகை வெடிப்பு எனும் ஒற்றை அணுகுண்டு உலகத்தை வெடிக்கச் செய்யும்.

பெற்றோம்.! வளர்க்கிறோமா?
*******************************

மற்ற உயிரினங்கள் உருவாக்கும் வாரிசுகள் அந்த இனத்தை நிலைநிறுத்த, பாதுகாக்க உதவியாக அமைகிறது. மனித இனத்தைப் பொறுத்தவரையில் பிறந்து வாழ வாய்ப்பில்லாத உயிரினங்கள் கோடிக்கணக்கில் இருக்க, இத்தனை சவால்களையும் மீறி ஆசை ஆசையாய் குழந்தை பெற்றுக்கொள்ள நாம் எத்தனிக்கிறோம் . ஆனால் குழந்தைகள் வளர்ப்பைப் பற்றி அறிந்துகொள்ள என்ன முயற்சிதான் எடுத்திருக்கிறோம்.
             
உங்கள் பெற்றோரைவிட எந்த விதத்தில் குழந்தைகள் வளர்ப்பை செவ்வனே செய்கிறீர்கள்  என்னும் கேள்விக்கு எத்தனை பெற்றோர்களிடம் பதில் இருக்கிறது. சரி நாம்தான் அப்படி என்ன அனுபவித்துவிட்டோம் என்று யோசித்துப் பார்த்தால், 10 முதல் 14 வயது வரை விவரம் தெரியாமல் கழிகிறது. 14 அல்லது 15 வயதில் தொடங்கி உடலாலும் மனதாலும் இணைதேடுதல், அதற்கான தகவமைத்தல், அதனால் தன்னில் ஏற்படும் மாற்றம் பற்றிய சிந்தைகளில் மூழ்கும். அப்பருவத்தில் குழந்தைகளையும் அவற்றைப் பற்றி பேச அனுமதிக்கப்படுவதில்லை; பெற்றோரும் பேசுவதில்லை.
          
குழந்தைப் பேறு எனும் அடகுக்கடையில்
******************************************* வாழ்க்கை!
*************
வாழ்வில் இயற்கையின் மலர்தலை உவகையாக அனுபவிக்க விடாமல், உபாதையாக தாங்கிக்கொண்டு பத்து பதினைந்து வருட வாழ்தலை கிடப்பில் போட்டு, திருமணத்தில் வாழ்தலுக்கான வழி பிறக்குமென்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். எதிர்பாலினம் பற்றிய மாயபிம்பங்கள் முமுமையாய் உடைவதற்குள் குழந்தையை பெற்றெடுக்கிறோம். பிறகென்ன திருமணத்தின் பெயரில் மீட்க நினைத்த வாழ்க்கையை குழந்தையின் பெயரில் இன்னும் ஒரு முறை அடகுவைக்கிறோம்.

பொம்மை
***********
             ‎
குழந்தைக்காகவென அடிப்படைத் தேவைகளைக் கூட அரை குறையாய் நிறைவேற்றிக்கொண்டு தன்னையே உருக்கி ஒரு தியாகக் கோட்டையை கட்டுகிறோம். ஆனால் அதில் நாமும் ஆசுவாசப்படுவதில்லை, குழந்தைகளையும் அனுமதிப்பதில்லை.
குழந்தை என்னும் பெயரின் கீழ் நம்மையே அடிமைப்படுத்திக் கொள்வதோடு அத்தகைய அடிமை வாழ்விற்கு அதீத சிரத்தையோடு  குழந்தையையும் தயார் செய்கிறோம். குழந்தைக்கு அறிவை தருவதை விடுத்து அச்சுகளில் வார்த்து பொம்மையாக்குகிறோம்.
             
நையா பைசா பிரயோஜனம் இல்லை.
****************************************

இயங்கிக் கொண்டிருத்தல் என்பது தானே உயிரோடிருத்தல். இயற்கைக்கு மாறாய் பிள்ளைக்காகவும் நானே உழைப்பேன் என்பது அபத்தமன்றோ.?
இந்த தொடர் சுழற்சி அடிமை ஓட்டத்தில் யார் தான் வாழப்போகிறார்கள்?
ஒவ்வொரு நிமிடத்திலும் லகிக்க ரசிக்க சிலாகிக்க சிந்திக்க செயல்பட ஆயிரம் இருக்கிறது. இவை அனைத்தையும் குழந்தைகளின் பெயரில் ஒதுக்கி வைக்கிறோம், நிற்க.! இதில் குழந்தைக்காவது நையா பைசா பிரயோசனம் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. தானாய்க் காரணமற்று பல்லைக்கடித்துக்கொண்டு வாழ்ந்த வறண்ட வாழ்விற்காய்ப் பிள்ளைகளிடம் பிரதிபலனை எதிர்பார்க்கிறோம். அதுவும் கிடைக்காத போது பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது.
                
வயதோடு சேர்த்து அறிவும் கூடுகிறதா?
******************************************

‎மருத்துவர் இதை உண்ணக்கூடாது, அதைத் தொடக்கூடாது என்று சொன்ன பின், ‎தன்னிச்சையாய் நடக்க முடியாத காலம் வந்த பின் தான் வாழக்கையை வாழவும் முடியுமோ என்று சிந்திக்கவே முடிகிறது. தன்னைப் பற்றியோ, தன் வாழ்க்கையைப் பற்றியோ கூட புரிய வக்கற்ற நிலையில் தான் நாம் நம் குழந்தைகளின் வாழ்விற்கும் சேர்த்தே முடிவெடுத்துக்கொண்டிருக்கிறோம்.
வயதிற்கும் அறிவிற்கும் இடையே ஒரு நேர்விகித சமன்பாட்டை நாமே உருவாக்கி அதை நாமே நம்பிக்கொண்டும் இருக்கிறோம்.
‎33 வயதில் மறைந்துபோன கணித மேதை ராமானுஜத்தின் தேற்றங்கள், 60 வயதைக்கடந்தாலும் சிலருக்குப் புரிவதில்லை. அன்னை தெரசா வயது முதிர்ந்த பின் இந்தியாவிற்கு சேவை செய்ய புறப்படவில்லை. 17 வயதில் அம்மா அண்ணனின் அதிருப்திகளையும் மீறி இந்தியா வந்தார். இவற்றை நாம் புரிந்து கொள்வதேயில்லை.
          
வரைய பழகிக்கொடுங்கள் வரைந்து
*************************************** அல்ல
******

ஒவ்வொரு குழந்தையும் ஒரு ஓவியம் வரையும் நோட்டுப் புத்தகமென வைத்துக்கொள்வோம். பிள்ளை தானே வரைய முயற்சிக்கையில் தவறுகள் நேரலாம். மேலும் அவனைவிட என்னால் அழகாக வரைய முடியுமென நினைத்து குழந்தையின் ஓவிய நோட்டு முழுவதும் நாமே வரைந்துவிடுகிறோம். அந்த நோட்டு புத்தகத்தை கடைசிவரை அந்த குழந்தையால் மூன்றாம் மனிதரின் நோட்டு புத்தகம் போல் வேடிக்கை பார்க்க முடியுமே தவிர தன்னுடையதாய் உணர முடியாது. அதற்கு பதில் அந்த புத்தகம் முழுவதும் குழந்தை ஒரு நல்ல ஓவியத்தை வரைய முயற்சித்து காகிதத்தை கீறி சிதைத்தாலும் சில கோடுகளை மட்டுமே வரைந்திருந்தாலும் கூட அதில் கற்றுக் கொள்ள நினைத்ததைப் பார்த்து அகமகிழ ஆயிரம் விசயங்கள் இருக்கும். காற்று இறக்கைகளை கிழித்துவிடுமோ என்ற அச்சத்துடன் குடுவைக்குள் வளர்க்கப்படும் வண்ணத்துப்பூச்சி உயிரோடிருந்துதான் என்ன பயன்...?
  ‎        
உயிரோடிருத்தல் மட்டுமே வாழ்கையா?
******************************************

 உயிரோடிருப்பவர்கள் எல்லாம் வாழ்வது கிடையாது. Living is different from survival. தன் வாழ்வையே வாழாத அல்லது வாழ கற்றுக்கொள்ளாத ஒரு இணை, ஒரு உயிரை உருவாக்கி தங்களுக்குத் தெரிந்த நியமங்களின் படி அதையும் வாழவிடாமல் துன்புறுத்துவது நியாயமா?
 
மீண்டும் ஒரு முறை யோசியுங்கள்
குழந்தைகள் எதற்கு!?
                  ‎

             ‎

Comments

Post a Comment

Popular posts from this blog

அக்காளின் எலும்புகள்

அப்பத்தா

பேச்சியம்மாளின் சோளக்காட்டுப் பொம்மை