இன்றைய காந்திகள்
புத்தகம்: இன்றைய காந்திகள்
ஆசிரியர்: பாலசுப்பிரமணியம் முத்துசாமி.
முன்குறிப்பு: காந்தியை பிடிக்காதவர்களுக்கும் இந்த புத்தகம் பிடிக்கும்.
அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் 58 வயதில் அரவிந்த் கண் மருத்துவமனையில் குழுமத்தை உருவாக்க டாக்டர் வெங்கடசாமியை உந்தித் தள்ளியது எதுவோ,
அமெரிக்கா செல்லவிருந்த வர்கீஸ் குரியனை சாலைகளே இல்லாத கிராமங்களில் கூட்டுறவு பால் பண்ணைகளை அமைத்து அமுல் நிறுவனத்தை உருவாக்க செய்தது எதுவோ,
அரசின் வறண்ட நிலப் பகுதியாக இருந்த இடத்தில் வற்றாத ஏரியை உருவாக்க ராஜேந்திர சிங்கை உழைக்கச் செய்தது எதுவோ,
ஜான் ட்ரெஸை பெல்ஜியத்தின் குடியுரிமையை துறந்து இந்தியக் குடியுரிமை பெற்று இந்தியாவின் சேரிகளில் வாழச் செய்து, லண்டனில் பொருளியல் படித்து விட்டு இந்தியாவில் வந்து சம்பளம் வாங்காமல் பேராசிரியராக இருக்க உந்தியது எதுவோ,
பங்கர் ராயை வெறும்பாத கல்லூரியை ஆரம்பிக்கச் செய்து, கிராமத்து வயது முதிர்ந்த பெண்களைக் கிராமத்தின் மின்சார சுய தேவையை நிவர்த்தி செய்யும் தலைவிகளாக உலகெங்கும் உருவாக்கியது எதுவோ,
அருணாராய் ஐ ஆட்சிப் பணியை உதற செய்து உழைக்கும் மக்களுக்காக ஜல்லிக்கட்டு போராட்டத்தை விட பெரிய போராட்டத்தை நடத்துவதற்கான உத்வேகத்தை தந்தது எதுவோ,
அதுவே மாசுமறுவற்ற மானுட அன்பு. நிபந்தனைகள் அற்ற கரிசனம். தன்னை முதன்படுத்துக்கொள்ளதா உன்னத தலைமை.
மேலும் தெரிந்து கொள்ள இந்த புத்தகத்தை அவசியம் படியுங்கள்.
ஒன்றுக்கொன்று தொடர்பற்ற வெவ்வேறு துறைகளில் கனவுகளோடு களம் இறங்கி பெரிய மாற்றங்களை உருவாக்கிய பதினோரு தனி மனிதர்களின் வாழ்வியலை இந்த புத்தகம் பேசுகிறது.
இவர்களிடம் அனைவருக்கும் இருக்கும் ஒற்றுமையாக நான் கண்டு கொண்டது என்னவென்றால்
~அரசுப்பணி அல்லது வேறு ஏதோ ஒரு பணிக்காக ஏதோ ஒரு ஊரில் ஏதோ ஒரு ஊருக்கு குடிபெயர்ந்த இவர்கள் அந்த மக்களின் தேவை, ஊரின் தேவை என்ன என்பதை உணர்ந்து அதற்கான மனிதர்களாக மாறியிருக்கிறார்கள்.
~ எந்த ஆதிக்க சக்தி இவர்களை அலைக்கழித்து வேறு ஒரு இடத்தில் பிடிங்கி நட்டாலும் எங்கெல்லாம் நடப்பட்டார்களோ அங்கெல்லாம் மலர்ந்திருக்கிறார்கள் அடிதட்டு மக்களுக்காக.
~ தன் உருவாக்கிய நிறுவனமே தன்னை புறந்தள்ளிய போதும், குழுவாய்ச் சேர்ந்து பணியை தொடங்கிய நண்பர்கள் விட்டுச்சென்ற போதும் மௌனமாய் புரட்சி செய்திருக்கிறார்கள்.
~ தோல்விகளை முடிவாக அல்ல மாற்று பாதை காட்டும் அறிவிப்பு பலகையாகவே கடந்து இருக்கிறார்கள்.
~ இவர்களுக்கு சாதகமான சூழலை இயற்கையோ மனிதர்களோ உருவாக்கித் தரவில்லை. இவர்கள் செய்ய வந்த பணிக்கான மூலப்பொருட்கள் எளிமையாக இவர்கள் கைக்கு கிடைத்து விடவில்லை. ஆனால் எல்லாவற்றையும் உருவாக்கும் மன வலிமை பெற்றவர்களாக எப்பொழுதும் நின்றிருக்கிறார்கள்.
~ அவமானங்களையும் இழப்புக்களையும் தோல்விகளையும் சிலர் அரசின் எதிர்ப்பையும் புன்னகையோடு கையாண்டிருக்கிறார்கள்.
பொதுவாக ஒரு துன்பத்தை மறக்க ஏதாவது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வை நினைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வார்கள் ஆனால் இதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
துன்பமாக இருக்கும் தருணத்தில் நாம் நினைத்துப் பார்க்கும் எல்லாவற்றிலும் எதிர்மறையான தான் நம் கண்முன் தோன்றும். உண்மையில் நாம் துன்பமாக இருக்கும் பொழுது நமக்கு ஏற்பட்டதை விட கொடிய துன்பத்தை நினைத்து பார்க்கும் பொழுது நம்முடைய துன்பம் எளிமையானதாக, கடந்து விடலாம் என்று தோன்றும்.
அப்படித்தான் வாழ்வில் சின்னச் சின்ன லட்சியங்களை ஆசைகளை வைத்துக் கொண்டு நிறைவேற்ற முடியாமல் திணறும் பொழுது மாபெரும் கனவுகளை சாத்தியப்படுத்திய இந்த சாதாரண மனிதர்களின் வாழ்க்கை பயணம் நம் பயணத்திற்கு கொஞ்சம் வேகம் ஊட்டும் என்பதில் ஐயமில்லை. அவசியம் படியுங்கள்.
பி.கு: 300 இலவச பிரதிகள் திட்டத்தில் பெற்ற கொண்ட பிரதி
Comments
Post a Comment