உண்மை_சொல்லும்_வாய்மொழி_வரலாறு

#புத்தக_அறிமுகம்

#உண்மை_சொல்லும்_வாய்மொழி_வரலாறு
-முனைவர் பேரா.இரா.காளீஸ்வரன்

வரலாறு மூன்று விதங்களில் எழுதப்படுகிறது
1.காலவரிசைப்படிப் பெரும் வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்வது.
2.அடித்தட்டு மக்களை மையப் புள்ளியாகக் கொண்டு வரலாற்றை எழுதுவது.
மூன்றாவது வகை இவ்விரண்டில் இருந்தும் வேறுபட்டது எந்தவிதத்திலும் பாடத்திட்டத்தில் இருக்கும் வரலாற்றோடு தொடர்பற்றது அதாவது ஒரு அடிமைப்படுத்தப்பட்டவனை மையமாகக் கொண்ட அவனது வரலாற்றை அடிமைப்படுத்தியவன் எப்படி சரியாக எழுத முடியும் எனவே 3.மக்களுடைய வரலாற்றை மக்களே எழுதுவது.

     மூன்றாம் வகை புத்தகமே இந்த #உண்மை_சொல்லும்_வாய்மொழி_வரலாறு
    ‎  கும்மிபாட்டு, உலைக்கும்மி, மொளக்கொட்டுக் கும்மி, ஊழிக்கூத்து, ராஜ ஒப்பாரி, மாரியம்மாள் வர்ணனை, கொல்லங்குடி கருப்பாயி அம்மாவின் கிராமத்து பாட்டு, வர்ணனை தெம்மாங்கு, கண்ணாத்தாள் வர்ணனை,கரகம், கொலைசிந்து,கதைப்பாடல், அப்பாதுரை எழுதிய 'தன்னையே மாய்த்த குயிலி'.'முத்துப்பட்டி மங்கை' என்ற நூலில் உடுக்கை பாட்டு காரர்களின் பாடல், பரதணிநாதனின் 'கண்ணாத்தாள் வதம்' ,ஆண்டிப் பண்டாரங்கள் பாடிய பதிகம், புண்ணியமூர்த்தியின் 'மழவராயர் மன்றாயர்' என்று இன்றும் மக்களிடம் வாய்மொழி பாட்டாய் நிற்கும் வரலாற்றையும் அந்த ஊரின் மைந்தர்களால் ஆவணப்படுத்தப்பட்ட கதைகளையும் மையமாகக்கொண்டு எழுதப்பட்ட பெண் சிறு தெய்வங்களின் ஆவணம் இந்த புத்தகம்.

    ‎ தான் தெரிந்து கொண்ட பெண் சிறு தெய்வங்களை மூன்று வகையாக பிரித்து இருக்கிறார் ஆசிரியர்
    ‎ 1.பிற்படுத்தப்பட்ட பெண் தெய்வங்கள் (பிரசவத்தின் போது இறந்து போன, அப்பா, அம்மா திட்டியதால் தன்னை மாய்த்துக் கொண்டவர்கள் )
2.மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் (ஜாதி மறுப்புத் திருமணம், பெற்றோரை எதிர்த்து முடிவு எடுத்தல், பங்காளி தகராறில் வெட்டி வீழ்த்தப்பட பெண்கள்)
3.ஒதுக்கி வைக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட பெண்கள்.
‎ ஊரின் நன்மைக்காக, மற்றவர்களுக்காக, ஆடு மாடுகளை காப்பதற்காக, சாதி மறுப்பை ஆதரிப்பதற்காக கொலை செய்யப்பட்டவர்கள்.

‎இப்படியாக ஒதுக்கி வைக்கப்பட்ட, பிறருக்காக உயிரை இழந்த 22 தாழ்த்தப்பட்ட பெண்களை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறது இந்தப் புத்தகம்.

    வரலாற்றின் கருவறை வாய்மொழி வரலாறு.
பொது கொடி காக்க உயிர்க்கொடி அறுத்துக்கொண்ட
பெண் கொடிகளைப் பற்றி பேசும் புத்தகம். இது பிழைக்க வந்த ஊரின் பிழைகளைத் திருத்த பிணமாய் வீழ்ந்து போனவர்களின் வாழ்க்கையைப் பேசும் புத்தகம்.  அதிகபட்சம் வேலுநாச்சியாருக்காக உயிரிழந்த குயிலியை நமக்குத் தெரியும் வேலு நாச்சியாரை கொல்லத் திட்டமிட்ட ஆங்கிலேயர்களுக்கு விலை போன தன் கணவனின் சதியைத் தெரிந்துகொண்டு அவன் கழுத்தை அறுத்து விட்டு வேலுநாச்சியார் போல் வேடம் அணிந்து வெள்ளை குதிரை ஏறி வேலுநாச்சியார் செல்லும் வழியில் சென்று தன் உயிரை மாய்த்துக் கொண்ட கண் மருத்துவச்சி #கண்ணாத்தாள். வேலுநாச்சியாரை ஆங்கிலப் படைகள் துரத்தி வரும் பொழுது வேண்டுமென்றே வழியை மாற்றி சொன்னதால் ஆங்கிலேயர்களால் தலைவெட்டப்பட்ட #வெட்டுடையாள்.

     ஒன்றா ரெண்டா வரலாறு இரத்தத்தால் எழுதப்பட்டது என்பார்கள் உண்மையில் #தாழ்த்தப்பட்ட_பெண்களின்_இரத்தத்தால்_எழுதப்பட்டதே_உண்மையான_வரலாறு என்பதை புரிய வைக்கிறது இந்நூல்
  நள்ளிரவில்  ஆண்களுக்குத் தெரியாமல் #செவ்வாய்_கொழுக்கட்டை   சாப்பிடும் பெண்களின் பலருக்கு அங்கு  தெய்வமாய் வீற்றிருக்கும் #பாகப்பிரகயாள் பஞ்ச காலத்திலும் ஊர் காத்த, பிள்ளைகளாய் வளர்த்த தம்பிகளாலே கொல்லப்பட்டவள்.
    ‎
         நிறைமாத கர்ப்பிணியை புணர வந்த கயவனை தன் சேலையின் முந்தியில் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு ஆதிக்க சாதியின் அடக்குமுறைக்கு பயந்து இன்னொரு முனையில் தன் கழுத்தை முடித்துக்கொண்டு கிணற்றில் குதித்து #சேலைக்காரி

       செஞ்சி தூணில் தன் தாயையும் தந்தையையும் பறிகொடுத்துவிட்டு அங்கிருந்து முஸ்லிம் பெண்களைச் சூரையிடிய சாமியாரை எலுமிச்சம்பழம் விளக்கால் எரித்துக்கொன்ற கொல்லப்பட்ட #துர்கா

    ஊரை எரிக்க கயவர்கள் மருந்து கலந்து கொண்டிருந்த குடிசைக்குள் தன் உடலில் தீமூட்டி உள்ளே நுழைந்து ஊருக்காக இறந்து போன பதினான்கு வயது மதிக்கதக்க சிறுமி #பூவாத்தா
    ‎
    இரவு ஊர் மாடு காக்க சென்று திருட வந்த  13 கள்ளர்களின் கழுத்தை அறுத்து தன் கழுத்து அறுபட்ட நிலையிலும் சங்கூதி செய்தி சொல்லி ஊர்மாடுகளை காத்து செத்துப்போன #தொரட்டுயம்மா.
     ‎
     ‎ ஓங்காரி, சிங்காரி, கண்ணியம்மா, முண்டககண்ணியம்மன், பெத்தனாட்சி, பொம்மியம்மா, வேட்டையம்மா என வழியெங்கும் பெண்களின் ரத்தம் நெஞ்சுக்கு உரமூட்டுகிறது. இதற்கு மேல் பெரிதாய் என்ன செய்துவிடுவீர்கள் என மனதில் வீரம் வெடிக்கிறது
காதுகளில் பறை அறைகிறது.

உண்மையில் பெண்களுக்கு தெய்வமே இல்லை.
பெண்ணே தெய்வம்.
அவள் முடிவெடுத்து
முன்னே நடக்கிறாள்.
வரலாறு,
அவள் பாத சுவடிகளை பதிவுசெய்து அடியொற்றுகிறது அவ்வளவே வாழ்வு.

Comments

  1. அருமை. இந்த நூல் வேண்டும். தயவுசெய்து உதவுங்கள்.(9994606654)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அக்காளின் எலும்புகள்

அப்பத்தா

பேச்சியம்மாளின் சோளக்காட்டுப் பொம்மை