கருக்கு

இன்னும் சாதியெல்லாம் இருக்கா என்ன?                                                 சமூகநீதி, சிறப்பு சலுகைகலெல்லாம் தேவையில்ல.                                  பரியேறும் பெருமாள் படத்துல காட்றது மாதிரி நிஜ வாழ்க்கைல நடக்க வாய்பில்ல.
இப்படியெல்லாம் பேசும், தான் வாழும் நிலத்தினைப் பற்றிய அடிப்படைப் புரிதலே இல்லாதவர்களுக்கு, நிச்சயம் அம்பேத்கரின் கட்டுரைகளையோ அல்லது சில ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடும், இந்திய சாதியம் பற்றிய தரவுகளையோ, படிக்கச்சொல்லி பரிந்துரைக்க முடியாது.
ஆனால், இத்தகையோர் பாமாவின் சுயவரலாற்று நாவலான கருக்கில் இருந்து தங்கள் வாசிப்பைத் தொடங்களாம்.
அந்தச் சேரியில் மூன்று வயது குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள், அதில் சிலர் முதலியாராம், அவர்கள் அரட்டுகிறார்கள் மற்ற குழந்தைகள் "சரிங்க ஐயா" என்று அவர்கள் ஏச்சையெல்லாம் வாங்கிக்கொண்டு அடிமை வேலை புரிகிறார்கள்.ஒரு குழந்தையின் மனதில் தான் தாழ்வான பிறப்பு, அடிமை என்னும் உணர்வை விதைத்த பாவத்தைக் கழுவ இன்னும் ஆயிரம் சமூகநீதி வந்தாலும் அது தகுதியும், நீதியுமான செயலே
மதம், கல்வி, பொருளாதாரமென அனைத்தும் இவர்களுக்கு எட்டாக்கனியேமலையேறி, விறகுவெட்டி, கீழே இறங்குவதற்குள் இரத்தவாந்தி எடுத்து, அந்த விறகை ஏழு ரூபாய்க்கு விற்கிறார்கள், முகத்தையும், முடியையும் முட்கள் பதம்பார்க்க உடலை ஒரு பொருட்டாய் கருதாமால் அடிமாடாய் உழைத்தால் தான் இவர்களுக்கு அன்றாடம் காய்ச்சி வாழ்வே சாத்தியப்படுகிறது.
‎ பண்ணையார் வீட்டில் அத்தனை வேலையையும் பார்த்து விட்டு, கூலியாய் முந்தைய நாள் மீந்த உணவைப் பெற்றுக்கொள்கிறாள் அதையும் கூட சாக்கடைக்கு அருகில் பாட்டியின் பாத்திரத்தில் ஊற்றித்தருகிறாள் அவ்வீட்டுப் பெண்.
ஊர்தலைவர் வடை வாங்கி  வர சொல்ல, வடை வாங்கிவருகையில் பொட்டலத்தைத் தான் தொட்டால் தீட்டாகக் கருதப்படும் என்பதால், பொட்டலம் கட்டப்பட்ட சடம்பைப் பிடித்து தூக்கி வருகிறார் ஊர் பெரியவர் ஒருவர்.
கல்லூரியில் சேர்ந்த புதிதில் மாற்று ஊடையற்று ஒரு தாவணியையே ஒருவாரம் தொடர்ந்து போட்டுக்கொள்ளும் பாமா, கல்லூரி இறுதியாண்டில் நிகழ்வொன்றுக்கு அனைவரும் பட்டுச் சேலை கட்ட, தன்னிடம் நல்ல ஆடையில்லாததால் அன்று முழுவதும் குளியலறையிலேயே நிற்கிறாள்.
இப்படியாய் கருக்கின் ஒவ்வொரு பக்கமும் செங்கருக்காய் மனதை அறுக்கிறது.வெறும் 90 பக்கங்களே கொண்ட சிறிய புத்தகம் சின்னஞ்சிறு நிகழ்வுகளின் உணர்வு தொகுப்பு.
நூல்: கருக்கு
ஆசிரியர்: பாமா

Comments

Popular posts from this blog

அக்காளின் எலும்புகள்

அப்பத்தா

பேச்சியம்மாளின் சோளக்காட்டுப் பொம்மை