பெத்தவன்
#பெத்தவன்
20 வருடங்களாகத் தவமிருந்து ஒரு மகளைப் பெற்ற, சாதிய வன்மம் நிறைந்த ஒரு தந்தையின் கதை.
வெறும் 30 ரூபாயில் கிடைக்கும் நாற்பதே பக்கங்களால் வாழ்வை புதுப்பித்துத் தரமுடியும்.மனதின் அழுக்குகளைக் கழுவி விடமுடியும். உங்கள் கண்ணீர் சுரப்பியின் திராணியை அறிந்து கொள்ள உதவ முடியும் என்றால் , அது பெத்தவன் கதையால் மட்டுமே சாத்தியம்.
கடலூர் வட்டார வழக்கில் பல உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட, சாதிய வன்மத்தைப் படம் பிடித்துக்காட்டும், கடைசிப் பக்கத்தின் இறுதி வரி வரை சுவாரசியம் குறையாத வகையில் பின்னப்பட்ட ஒற்றைக் கதை.
கதையில் தந்தை தவமாய் தவமிருந்து பெற்ற மகளுக்கு சோற்றில் விசம் வைத்துக்கொடுப்பதைப் போன்ற காட்சி, கண்ணீரோடு துணிந்து அதை உண்ணும் மகள், தடுக்கமுடியால் அருகில் அமர்ந்து அழுது கொண்டே தண்ணீர் குடுக்கும் தங்கை. (தண்ணீர் விசத்தின் வீரியம் குறைக்கும் என்ற நம்பிக்கையில்)பக்கத்தில் உட்கார்ந்து சாப்பாடு போடும் அப்பா, கதறும் அம்மா,
துடிக்கும் பாட்டி ,என்ற அந்தக் காட்சியை, நிச்சயம் கண்ணீரின்றி யாரும் கடக்க முடியாது.
சாதியின் வறட்டுக் கையாளாகாதத் தனத்தை உணர்ந்தும், ஒட்டுமொத்த ஊருக்கு எதிராக
நிற்கத் திராணியற்ற, உயிரோடிருக்கும் வரை மகளுக்காக வாழ்ந்த, உயிரையும் மகளுக்கென தந்தத் தந்தையின் கதை...
ஆம்!
வீட்டில் இருந்த சொற்பத் தங்கம் பணமெல்லாம் மகளிடம் கொடுத்தப் பின்னும் வண்டியேற்றுகையில் இடுப்பில் இருந்த வெள்ளி அருணாக்கொடியையும் உருவி மகள் கையில் கொடுத்தனுப்பும் பெத்தவனின் கதை.
சாதியத்தின் கொடூரத்தை எந்தவிதப் பண்டிதத்துவத்தையும் புகுத்தாமல்
பாமரணுக்கும் புரியும் வண்ணம் புனையப்பட்ட உண்மைகளின் தொகுப்பு
புத்தகம் : பெத்தவன்
பதிப்பகம். : பாரதி புத்தகாலயம்
எழுத்தாளர்: இமையம்
Comments
Post a Comment